சென்னை ஸ்பெஷல் : சைவ பிரியாணி

சென்னை ஸ்பெஷல் : சைவ பிரியாணி செய்வது எப்படி ...!!


என்னென்ன தேவை?

கேரட், பீன்ஸ்,

பச்சை பட்டாணி,

உருளைக் கிழங்கு – தலா 100 கிராம்

பச்சை மிளகாய் – 4

தயிர் – 3 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

பட்டை – 2

லவங்கம் – 4

ஏலக்காய் – 2

ஜாதிக்காய்த் தூள் – சிறிதளவு

வெங்காயம், தக்காளி – தலா 2

இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்

பாசுமதி அரிசி – 2 கப்

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவையுங்கள். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டுப் பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

அதில் இஞ்சி – பூண்டு போட்டு வதக்கி பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு கொத்தமல்லி, புதினாவைச் சேர்த்து காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள்.

மிளகாய்த் தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கி, ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்துச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்

நான்கு கப் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து அதை அரிசி கலவையில் ஊற்றிக் கிளறி குக்கரை மூடிவிடுங்கள். சிறு தணலில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரியாணி தயார்.

வெந்தயக்கீரை சாம்பார்

உடல் குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ...!!

உடல் குளிர்ச்சி மற்றும் குடல் புண்களை ஆற்றும் வெந்தயக்கீரை சாம்பார்..

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.

* வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

* எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.

மலபார் ஸ்பெஷல் அவல் பால்

மலபார் ஸ்பெஷல் அவல் பால் செய்து எப்படி?
மலபார் ஸ்பெஷல் அவல் பால்தேவையான பொருட்கள்:

அவல் – 4 டேபிள் ஸ்பூன்

பூவம் பழம் – 1

சர்க்கரை – தேவையான அளவு

நெய் – 1/2 டீஸ்பூன்

பால் – 1 கப்

கிஸ்மிஸ் – சிறிது

செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைப் போட்டு, கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஃப்ரிட்ஜில் உள்ள பாலை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், அவலை சேர்த்து வறுக்க வேண்டும்.

அடுத்து ஒரு டம்ளரில் சிறிது பாலை ஊற்றவும், பின் சிறிது அவல் போட்டு, மீண்டும் பால் ஊற்றி, பின் அவல் போட்டு, மற்றொரு முறை பால் ஊற்றி, மீண்டும் அவல் போட்டு, மேலே கிஸ்மிஸ் தூவினால், அவல் பாலை ரெடி!!!

ருசியான தக்காளி குருமா

ருசியான தக்காளி குருமா செய்வது எப்படி...!!

ருசியான தக்காளி குருமாதேவையான பொருட்கள் :

தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க :

தேங்காய் – 2 பத்தை
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10

தாளிக்க :

கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்

செய்முறை :

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான தக்காளி குருமா ரெடி.

* இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்...!!


தயிர் புளிக்காமல் இருக்க...

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

கீரை பசுமையாக ருசியாக இருக்க...

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

ஸ்வீட் செய்த பின்...

ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

கைகளில் ஏற்படும் வாடையை போக்க
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.

பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க...

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க...

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க...

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும். சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

பூரி நமத்துப் போகாமல் இருக்க...

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்

ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.

கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.

கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று இருக்கும்.

பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். டைல்ûஸ சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்களேன். "பளிச்' சென்று ஆகிவிடும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

கேரட் அல்வா செய்யும்போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.

வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

பஞ்சு போன்ற இட்லிக்குக் கிரைண்டரில் உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்.

பாசிப்பருப்பு கடையல்

பாசிப்பருப்பு கடையல் செய்வது எப்படி என்று பார்போமா..??

பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

அதிலும் பாசிப்பருப்பை கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேச்சுலர்களுக்கு இந்த சமையல் மிகவும் எளிமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடையலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… நெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான நிலையில் வைத்து 15-20 நிமிடம் நன்கு பருப்பை வேக வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயக்களி

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயக்களி..!

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 500 கிராம்

பச்சரிசி மாவு – 200 கிராம்

வெல்லம் – 100 கிராம் (தூளாக்கவும்)

சுக்குதூள் – அரை தேக்கரண்டி ஏலக்காய் –2 (தூளாக்கவும்)

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

* வெந்தயத்தை வறுத்து தூளாக்குங்கள்.

* அரிசி மாவில், வெந்தயத்தூள், தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

* பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகுஆக்கி வடிகட்டி எடுக்கவும்.

* கரைத்து வைத்துள்ள மாவை வாணலியில் கொட்டி நன்கு கிளற வேண்டும். வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை கலந்து கிளறவேண்டும்.

மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். பச்சை தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

* பின்பு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்.

* லேசான சூட்டில் சாப்பிடுங்கள்.

* இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். அதனால் அவர்கள் மெலிந்துபோவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும்.

எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும். தலைமுடி உதிர்வது குறையும்.

தேங்காய் லட்டு

குழந்தைகளுக்கான சுவையான தேங்காய் லட்டு..!!

தேங்காய் லட்டு செய்யலாமா..

தேவையான பொருட்கள் :-

தேங்காய் துருவல் - 2 கப்
பால் - 2 கப்
சீனி - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
பதாம் பருப்பு - 10
பட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை :-

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15
நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும்.

சுவையான தேங்காய் லட்டு ரெடி

தேங்காய் பர்ஃபி

தேங்காய் பர்ஃபி...!!!

தேங்காய் பர்ஃபியை கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் மாலை வேளையில் இதனை செய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! சரி, இப்போது அந்த தேங்காய் பர்ஃபியை எப்படி வீட்டிலேயே ஈஸியாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்செய்முறை:

ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி.

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்...!!!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
பட்டை, லவங்கம் - 1
ஏலக்காய் - 1
முந்திரி, உப்பு, நெய் - தேவையான அளவுசெய்முறை:

பச்சை கொத்தமல்லியை சுத்தம் செய்து அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு வதங்கியப்பின் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ' ஸ்டீம்' வந்ததும் 'வெய்ட்' போடவும் அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

நிறம் மற்றும் சுவை நிறைந்த மணமுள்ள கொத்தமல்லி சாதம் தயார்.

மின்ட் - டொமேட்டோ பிரியாணி

மின்ட் - டொமேட்டோ பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பழுத்த தக்காளி - 8, புதினா - ஒரு கட்டு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், புதினா, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரண்டரை கப் நீர் சேர்க்கவும். நீர் நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தக்காளி - பனீர் பிரியாணி

தக்காளி - பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, நாட்டுத் தக்காளி - 3, பனீர் துண்டுகள் - 150 கிராம், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பனீர் துண்டுகளை சதுர சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

பிரிஞ்சால் பிரியாணி

பிரிஞ்சால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 2, சின்ன கத்திரிக்காய் - 6, பூண்டு - 8 பல், தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். சின்ன கத்திரிக்காயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து... பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், பூண்டு, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர் தெளித்து மூடி போடவும். கத்திரிக்காய் வெந்ததும் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

வாழைப்பூ உருண்டை பிரியாணி

வாழைப்பூ உருண்டை பிரியாணி

தேவையானவை - வாழைப்பூ உருண்டை செய்ய: வாழைப்பூ (மீடியம் சைஸ்) - ஒன்று, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, முந்திரி - 6, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பிரியாணி செய்ய: பாசுமதி அரிசி - 2 கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - ஒரு கைப்பிடி அளவு , வெங்காயம் - 2, நாட்டுத் தக்காளி - 3, பச்சை மிளகாய் - 3, பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 2 கப், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக்கான அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டைகளை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.

சீஸ் பிரியாணி

சீஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், துருவிய சீஸ் - அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

இனிப்பு உளுந்து வடை

இனிப்பு உளுந்து வடை

தேவையானவை:

முழு உளுந்து - 150 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க‌த் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தைக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காயோடு சேர்த்து தண்ணீர் இல்லாமல் பேஸ்டாக அரைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீரை லேசாகத் தெளித்துக் கொள்ளலாம். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கவும். இனி, உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை வடிவத்துக்கு தட்டி எண்ணெயில் விட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுத்து கிச்சன் டவலில் வைக்கவும். அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்பட்ட பிறகு இதை வாழைப்பழத்துடன் பரிமாறவும். வடை செய்த பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அதிகமாகும்.

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய் -100 கிராம் (விருப்பமான சைஸில் நறுக்கவும்)
மஞ்ச‌ள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கினால், மாங்காய் நறுக்கென இருக்கும். மிருதுவாக வரவேண்டுமானால் மேலும் ஒரு நிமிடம் கிளறி, இறக்கினால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

கீரைக் கடைசல்

கீரைக் கடைசல்

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை அல்லது முளைக்கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவுதாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
பூண்டு - 6 பல்

செய்முறை:

கீரையை நன்றாகச் சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் கீரையைச் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கி ஆற விடவும். பிரஷர் போனதும், குக்கரைத் திறக்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து பூண்டு தட்டி போட்டு, இந்தக் கீரை கலவையுடன் கலக்கவும்.

வாய்க்கு ருசியான இந்தக் கீரை கடைசல் பெரியவர்களுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும். கீரையில் வைட்டமின் சத்துக்கள் நிறையவே உண்டு. சீரகம் சீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.

மஷ்ரூம் தோசை

மஷ்ரூம் தோசை

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

மசாலா தயாரிக்க:

மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைத்துக் கொள்ள:

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிதமான தீயில் வைக்கவும். இந்தக் கலவை நன்கு சுருள வதங்கியதும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பிறகு, தோசைமாவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, தோசைக் கல்லில் தோசையை வார்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் மஷ்ரூம் கலவையை தோசையின் ஒரு பாதி அளவுக்குத் தடவிக் கொள்ளவும். தோசை வெந்ததும் மறு பாதியை மடித்து மூடி விடவும். இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள தனியாக சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.

மஷ்ரூமில் உள்ள புரதச்சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பீட்சா, பர்கர் என விரும்பும் குழந்தைகள் இதன் ருசிக்கு மயங்கி விடுவார்கள். விருப்பப்பட்டால், சீஸ் தடவிக் கொடுக்கலாம்.

வெள்ளரிப் பிஞ்சு சாட்

வெள்ளரிப் பிஞ்சு சாட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய மாங்காய் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். அந்த சூட்டிலேயே குடமிளகாய், அரிசிப்பொரி, மாங்காய் சேர்த்து, இறுதியில் வெள்ளரிப்பிஞ்சையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.