வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை:

சாதம் செய்ய:
பிரியாணி அரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 4
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி, அரைமணி நேரம் ஊற வைக்கவும். கனமானஅடிப்பகுதியுள்ள பாத்திரத்தை, அடுப்பில் வைத்து, வெண்ணெய் சேர்த்து உருகியதும் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். ஊறிய அரிசியை தண்ணீர் இறுத்து இதில் சேர்த்து லேசாக வறுக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு மூடி போட்டு வேக விடவும். அரிசி வெந்து தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணைத்து பாத்திரத்தைக் கீழே இறக்கி வைக்கவும்.

காய்கறிகள் செய்யும் முறை:

கேரட், பீன்ஸ், பட்டாணி - தலா 100 கிராம்
காலிஃப்ளவர் - அரை பூ
குடமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்)
பெங்களூர் தக்காளி - 4
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், பீன்ஸை நீளமாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். குடமிளகாய், காலிஃப்ளவரை நீளமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் குடமிளகாய், காலிஃப்ளவரைச் சேர்த்து சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், உப்பு சேர்த்து காய்கறிகள் குழையாமல் வதக்கி இறக்கவும்.

மசாலா தயாரிக்க:

தயிர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள்- 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், பட்டை கிராம்பு - தலா 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6
பச்சைமிளகாய் - 5-6
(இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பேஸ்டாக அரைத்து, இதில் இருந்து 1 டேபிள்ஸ்பூன் தனியாக எடுத்து வைக்கவும்)
கொத்தமல்லித்தழை (நறுக்கியது) - அரை கப்
கழுவிய புதினா - ஒரு பிடி
தக்காளி - 6 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

தயிரில் மேற்கண்ட அனைத்தையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

வெஜிடபிள் பிரியாணி செய்ய:

வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வதக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும். ஊறிய தயிர் கலவையையும் சேர்த்து சிம்மில் வைத்துக் கிளறவும். காய்கறிகள் குழைந்து போகக் கூடாது. மசாலாக்களில் உள்ள நீர் வற்றிய பிறகு அடுப்பை அணைத்து இறக்கவும்.
வாய் அகன்ற ஒரு தட்டில் பிரியாணி சாதத்தின் ஒரு பகுதியைப் பரப்பி வைக்கவும். இதன் மேல் காய்கறிக் கலவையைப் பரப்பவும். இதன் மேல் வெந்த சாதம் என லேயர் லேயராகப் பரப்பி வைக்கவும். இனி அத்தனை லேயரையும் ஃபோர்க்கால் மெதுவாகக் கலக்கவும்.

தம் செய்யும் விதம்:

கிளறிய பிரியாணியை கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் சிறிது நெய் தடவி சேர்த்து, குறைந்த தீயில் மூடி போட்டு ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து பரிமாறவும்.