அம்மிணிக் கொழுக்கட்டை

அம்மிணிக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது தீயைக் குறைத்துவிட்டு, மாவைத் தூவிக் கட்டி தட்டாமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். மாவை மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து மாவை கட்டி இல்லாமல் பிசைந்து கையில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு பட்டாணி அளவுக்குச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் ஊறிய கடலைப்பருப்பு சேர்க்கவும். பிறகு பெருங்காயத்தூளைப் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்திருக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளைப் போட்டுக் கிளறவும். இறக்கும் முன்பாக தேங்காய்த் துருவலை சேர்த்துக் கலந்து இறக்கவும்.