மஷ்ரூம் தோசை

மஷ்ரூம் தோசை

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

மசாலா தயாரிக்க:

மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைத்துக் கொள்ள:

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிதமான தீயில் வைக்கவும். இந்தக் கலவை நன்கு சுருள வதங்கியதும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பிறகு, தோசைமாவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, தோசைக் கல்லில் தோசையை வார்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் மஷ்ரூம் கலவையை தோசையின் ஒரு பாதி அளவுக்குத் தடவிக் கொள்ளவும். தோசை வெந்ததும் மறு பாதியை மடித்து மூடி விடவும். இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள தனியாக சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.

மஷ்ரூமில் உள்ள புரதச்சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பீட்சா, பர்கர் என விரும்பும் குழந்தைகள் இதன் ருசிக்கு மயங்கி விடுவார்கள். விருப்பப்பட்டால், சீஸ் தடவிக் கொடுக்கலாம்.