பச்சை பயறு மிளகு மசாலா

பச்சை பயறு மிளகு மசாலா
உடல் ஆரோக்கியமாக இருக்க பயறு வகைகளை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் பச்சை பயறை சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். அதுவும் பச்சை பயறு மிளகு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த பச்சை பயறு மிளகு மசாலா செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த பச்சை பயறு மிளகு மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பயறை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி அடுப்பல் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு குக்கரில் உள்ள பச்சை பயறை நீருடன் வாணலியில் ஊற்றி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து, உப்பு சுவை பார்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பச்சை பயறு மிளகு மசாலா ரெடி!!!