பருப்புருண்டைக்குழம்பு

பருப்புருண்டைக்குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு- 1 கிண்ணம்
மிளகாய்வற்றல்- 3
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

வறுத்துத் திரிக்க:

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தெக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

உருண்டைகள் செய்முறை:

1. துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்தப் பருப்பைக் களைந்து விட்டு தண்ணீர் விடாமல் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு மையாக அரைக்காமல் நற நறவென்று அரைத்து எடுக்கவும்.
3. மைக்ரோவேவ் இருப்பவர்கள் அரைத்ததை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கலாம், அல்லது இட்லித்தட்டில் அரைத்தக் கலவையைப் பரப்பி வெந்து எடுக்கலாம்.
4. ஒரு வாணலியில் குறைந்த தீயில் எண்ணெய் விட்டு வேக வைத்தப் பருப்பை வதக்கவும்.
5. ஆற விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்(குழம்பில் ஊறிப் பெரிதாக வரும்)
6. சிலர் எண்ணெயில் பொரித்து வைத்தும் குழம்பில் போடுவார்கள், இவ்வகையில் உருண்டைகள் உடையாது, குழம்பும் சீக்கிரம் தயாராகும்.

குழம்பு செய்முறை:

1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

2. வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து எடுக்கவும்(வெந்தயம், கடலைப்பருப்பு, தனியாவை வறுத்துத் தனியே வைத்து விட்டு கடைசியில் மிளகாய்வற்றலை வறுக்க வேண்டும்)

3. மின்னரைப்பானில் திரிக்கும் போது மிளகாய்வற்றலைக் கடைசியில் போட்டுத் திரிக்க வேண்டும். வறுத்துத் திரிப்பதற்குப் பதிலாக சாம்பார் பொடியையே பயன்படுத்தலாம்.

4. வாணலியை ஏற்றி எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு,கரைத்தப் புளித்தண்ணீரை 3 டம்ளர் அளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள், வறுத்துத் திரித்த பொடி அல்லது சாம்பார் பொடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

5. பிடித்து வைத்த உருண்டைகளைக் கொதிக்கும் புளித்தண்ணீரில் போட வேண்டும், போட்டவுடன் கரண்டி வைத்து அமுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் உடைந்து விடும், தீயையும் குறைத்து விட வேண்டும்.

6. முதலில் 5, 6 உருண்டைகளைப் போட்டு அது வெந்து மேலே வரும் போது மீதி உருண்டைகளைப் போடவும்.

7. குழம்பு கெட்டியாக வந்தால் கொஞ்சம் நீர் விடலாம், தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசி மாவைக் கரைத்துக் கொட்டி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்..

8. முட்டைக்கோஸ், பீன்ஸ், அவரைக்காய் பொரியல் என்று எவ்வகைப் பொரியலும் இக்குழம்பிற்கு இணையாகும்.

பின் குறிப்புகள்:

பருப்புருண்டைக் குழம்பு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், குறைந்த தீயில் செய்ய வேண்டும், புளி நீர் அதிகம் கொதிக்க விட்டுப் பின் உருண்டைகளைப் போடக் கூடாது. உருண்டைகளைப் போட்டதும் கரண்டியால் நசுக்கக் கூடாது.