Showing posts with label பானகம் ஒரு பானம். Show all posts
Showing posts with label பானகம் ஒரு பானம். Show all posts

பானகம் ஒரு பானம்

பானகம் ஒரு பானம்

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்