பாசிப்பருப்பு கடையல்

பாசிப்பருப்பு கடையல் செய்வது எப்படி என்று பார்போமா..??

பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

அதிலும் பாசிப்பருப்பை கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேச்சுலர்களுக்கு இந்த சமையல் மிகவும் எளிமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடையலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… நெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான நிலையில் வைத்து 15-20 நிமிடம் நன்கு பருப்பை வேக வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!