புளி இல்லா கறி

புளி இல்லா கறி

காய்ச்சல் கண்டவர்கள் காய்ச்சலிருந்து மீண்டு வந்த பிறகு, நாவுக்கு எந்த சுவையும் தெரியாது. புளி இல்லா கறி, அவர்களின் நாவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
அவரைக்காய் - கால் கிலோ (மீடியம் சைஸில் நறுக்கவும்)
முருங்கைக்காய் - 1 (சின்ன துண்டுகளாக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 200 கிராம்
பெருங்காயம் -
சிறு துண்டு (பொடிக்கவும்)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

அரைக்க:
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்

தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரைக்க வேண்டிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை வாணலியில் லேசாக வறுத்து குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காய் மற்றும் முருங்கைக்காயைச் சேர்த்து மஞ்சள்தூள், வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

காய்கள் வெந்ததும் இதனுடன் வெந்த பாசிப்பருப்பு, மிக்ஸியில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பில் காய்கறிக்குப் பதில் வெறும் முருங்கை இலை சேர்த்தும் செய்யலாம்.