பலாக்காய் குழம்பு

பலாக்காய் குழம்பு


கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். மேலும் இவற்றில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படுவதோடு, புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது இந்த பலாக்காயை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 250 கிராம் (தோலுரித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 6-7 பல் (லேசாக தட்டியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் பலாக்காயை நன்கு தோலுரித்து, 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி, கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாக்காயை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அந்த பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பிரியாணி இலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கலவையை நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பலாக்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குறிப்பு: வேண்டுமெனில் இத்துடன் காராமணியை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்