துவரை சில்லி கோஃப்தா

துவரை சில்லி கோஃப்தா

தேவையானவை: -

குழம்புக்கு: புளிக்கரைசல் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், தக்காளி - 2, எண் ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

கோஃப்தாவுக்குத் தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பூண்டு பற்கள் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகாரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதில் பூண்டு, பெரிய வெங்காயம், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். இதை தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். இதுதான் கோஃப்தா.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் போட்டு வதக்கி... உப்பு சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும். தக்காளி வெந்து கரைந்த பிறகு, அரைத்து வைத்த விழுதை கொதிக்கும் புளிக்கரைசலில் ஊற்றவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கிவிடவும் (இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டீஸ்பூன் சில்லிசாஸ் ஊற்றினால் நன்கு சேர்ந்தாற்போல வரும்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கலந்துவிடவும். அரை மணி நேரம் இந்த உருண்டைகள் ஊறியதும் பரிமாறவும்.