ராகி உப்புமா

ராகி உப்புமா

வாரம் ஒருமுறை ராகியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய ராகியை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் ராகியைக் கொண்டு ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா போன்றவை செய்யலாம். இங்கு ராகி உப்புமாவை எப்படி மிகவும் ஈஸியான முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்...

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி மாவை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் சீரகத்தை போட்டு தாளித்து, பின் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மெதுவாக ராகி மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதனை இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால் ராகி உப்புமா ரெடி!!!