தினை தக்காளி தோசை

தினை தக்காளி தோசை

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அதிலும் தானியங்கள் கொண்டு செய்யப்படும் காலை உணவை உட்கொண்டால், இன்னும் நல்லது. அதில் அனைவருக்கும் கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் சப்பாத்தி மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் சோளம் மற்றும் தினை கொண்டு அருமையான சுவையில் தோசை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த தோசை சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மேலும் இந்த தோசையை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிட்டால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த தினை தக்காளி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்
சோளம் - 1 கப்
தினை - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சோளம் மற்றும் தினையை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு அரைத்துக் கொண்டு, தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும். பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான தினை தக்காளி தோசை ரெடி!!!