பூரி

பூரி

மொறு மொறு பூரி செய்யத் தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
ரவை – 4 தேக்கரண்டி, உப்பு
எண்ணெய் – பொரிப்பதற்கு (தேவையான அளவு),

செய்முறை:

1. கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்துகொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.

2. எண்ணெய் சேர்த்து, ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.

3. சிறுசிறு உருண்டைகளாக (சிறிய எலுமிச்சை அளவு) உருட்டித் தயாராக வைத்துக் கொண்டு, உருண்டைகள் இருக்கும் பாத்திரத்தை மூடியே வைத்திருக்கவும்.

4. வாணலியில் எண்ணெய்யை மிதமான சூட்டில் காயவைக்கவும்.

5. பூரி உருண்டையை எண்ணெய்யில் தொட்டுக் கொண்டு சின்னச் சின்னதாக இடவும்.

6. இட்டு முடித்ததுமே எண்ணெய்யில் பொரிக்கவும். ஒருபக்கம் வேகும்போதே, கரண்டியால் எண்ணெய்யை மேல்பக்கமும் விட்டால் உப்பி பெரிதாகும். லேசாக எண்ணெய்யில் அழுத்தி பொரியவைக்கவும்.அடுத்தபக்கமும் திருப்பி, பொன்னிறமாகச் சிவந்ததும், முற்றிலும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

பூரிக்கான இணை உணவுகள் உருளைக்கிழங்கு மசாலாவும் குருமாவும் தான். அதை சப்பாத்திக்கான இணை உணவுகள் பகுதியில் பதிப்பிக்கிறேன்.

பூரி சூட்சமங்கள்:

பூரி செய்வது தனிக்கலை, கவனமாகச் செய்தால் உப்பலாக வரும், கவனம் சிதறி விட்டால் சொதப்பி விடும். பூரி மாவைப் பிசையும் போது தளர்த்தியாகப் பிசையக் கூடாது.

1.. சப்பாத்தியைவிட பூரி மாவு அதிகத் தண்ணீர் பசை இல்லாமல் கெட்டியாக இருக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி இருந்தால் அதிகம் எண்ணை குடித்து சொதசொதவென்று ஆகிவிடும்

2. ச‌ப்பா‌த்‌தி‌க்கு வை‌ப்பது போ‌ல் ‌பிசை‌ந்த மாவை நீண்ட நேரம் வைக்கக் கூடாது.

3. சிறிதளவு எண்ணெய் ம‌ற்று‌ம் தண்ணீர் விட்டு நன்றாக அழுத்திப் பிசைய வேண்டும். மாவு தளர்ந்து விட்டால், பூரி உப்பினாலும் உடனே அமுங்கி விடும்.

4. பூ‌ரி‌மாவைக் கனமாக இட்டால் உப்பாது. மிகவும் லேசாக இட்டால் அப்பளம் மாதிரி வந்து விடும்.

5. பூ‌ரியை பொறிக்கும் எண்ணெய் மிகவும் சூடாக இருக்க வேண்டும். அ‌ப்போதுதா‌ன் போ‌ட்டது‌ம் பூ‌ரி உ‌ப்பு‌ம். அ‌‌வ்வாறு சூடு குறை‌ந்தா‌ல் பூ‌ரி சரியாக வராது.

6. பூரி பொறித்த எண்ணெயை உடனடியாக அப்பளம் பொரித்துக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

7.பூரிக்குப் பொரித்த எண்ணெயை மீண்டும் பொரிக்க உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அதனால் எண்ணெய் வைக்கும்போதே, குறைந்த மற்றும் தேவையான அளவு மட்டுமே வாணலியில் எண்ணெய் வைக்கவும்.