வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

தேவையானவை:

கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) 150 கிராம்.
உளுந்து - 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
முட்டைக்கோஸ் - 25 கிராம்,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
குடமிளகாய் - ஒன்று
இந்துப்பு (பிளாக் சால்ட் அல்லது நெல்லிப்பொடியும் பயன்படுத்தலாம்) சிறிதளவு

மாவு கலக்கும் முறை:

முறை 1:

காய்கறிகளை சிறிதளவு நீர் விட்டு அரைத்து, அவற்றில் கேழ்வரகு மாவைக் கலக்கவும். பின், சிறிதளவு நீர்விட்டு பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். வடைமாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

முறை 2:

அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும். கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகளைச் சேர்த்து கலக்கவும். இந்த இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் மாவு தயாரிக்கலாம். இதற்கு, கடல் உப்புக்கு பதிலாக இந்துப்பு சேர்க்கவேண்டும். இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம். கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். முந்திரி, வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம். இதுபோல் முருங்கைக் கீரை+கேழ்வரகு மாவு கலந்து முருங்கைக்கீரை மிக்ஸ் கேழ்வரகு அடை செய்யலாம்.

குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.