வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்

வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்


தேவையானவை:

வடு மாங்காய் - 250 கிராம்

மொச்சை - 250 கிராம்

பூண்டு - 25 கிராம்

சின்ன வெங்காயம் - 75 கிராம்

பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - ஒன்றரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

புளித்தண்ணீர் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

வடு மாங்காயைக் கழுவி ஈரம் போக துடைத்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும். மொச்சையைத் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் தண்ணீர் இறுத்து புது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து மைய வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இதில் வடு மாங்காய், உப்பு, மொச்சையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லிதழை தூவிப் பரிமாறவும்.