நரலி பாத்

நரலி பாத்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 100 கிராம்
தேங்காய்த்துருவல், வெல்லம் - தலா 100 கிராம்
தேங்காய்ப்பால் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 4
சிறிய பட்டை, ஏலக்காய் - தலா 1
முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாஸ்மதி அரிசியை இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். கனமான அடிபகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் 25 மில்லி நெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை) ஆகியவற்றைச் சேர்த்து பொரிந்து வரும்வரை வதக்கவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து அரிசி உடைந்துவிடாதபடி லேசாக வதக்கவும்.

இதற்கிடையே இன்னொரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், உடைத்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் பாலோடு சேர்ந்து கரைந்து கெட்டியாகும் பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிது நேரம் கிளறி அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை அரிசியோடு சேர்த்துக் கிளறி, உப்பு போட்டு 20 நிமிடம் குறைந்த தீயில் மெதுவாக அரிசி உடையாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தீயை மிதமாக்கவும். இதன் மீது உள்ள சாதம் பாத்திரத்தை வைத்து மூடி, இதன் மேலே கனமான பொருளை வைக்கவும். 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மீதம் இருக்கும் நெய்யை கலவையில் ஊற்றிக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி இறக்கினால் நரலி பாத் தயார்.